இன்னும் சில தினங்களில் ரஜினி வீடு திரும்பிவிடுவார். உடனே ரசிகர்களுக்காக அறிக்கை விடுவார். தொலைக்காட்சியிலும் தோன்றிப் பேசுவார் என்று நடிகர் தனுஷ் கூறினார்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 13ந் தேதி, சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் மருமகன் நடிகர் தனுஷ், "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார். அவருக்கு நுரையீரலில் மட்டுமே பிரச்சினை உள்ளது. அதன் காரணமாக அவருக்கு அடிக்கடி காய்ச்சல் ஏற்படுகிறது. இப்போது அவர் குணம் அடைந்து வருகிறார். ரசிகர்கள் பதற்றப்பட தேவையில்லை.
ரஜினிகாந்த் பற்றிய வதந்திகளை நம்பாதீர்கள். அவருக்கு தனிமையும், ஓய்வும் தேவைப்படுகிறது. அதற்காகவே ஆஸ்பத்திரியில் இருக்கிறார். சிகிச்சைக்காக, அவர் அமெரிக்கா போவதாக வந்த வதந்தியை நம்ப வேண்டாம். ஒரு சில நாட்களில் அவர் வீடு திரும்பி விடுவார். வீடு திரும்பியதும் அவரே அறிக்கை வெளியிடுவார்..," என்றார்.
அப்போது ஒருநிருபர், "ரஜினி தொலைக்காட்சியில் தோன்றிப் பேசலாமே", என்றார்.
"நிச்சயம் பேசுவார். பொறுமையாக இருங்கள் ப்ளீஸ்", என்றார் தனுஷ்.
குவிந்தனர் ரசிகர்கள்...
முன்னதாக, நடிகர் ரஜினிகாந்த் குறித்த வதந்திகளால் சோர்வடைந்த அவரது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவரைப் பார்க்க அனுமதிக்கக் கோரி அவர் சிகிச்சை பெற்றுவரும் ராமச்சந்திரா மருத்துவமனையின் பிரதான கட்டடத்தை நேற்று மாலை முற்றுகையிட்டனர். இதனால் அந்தப் பகுதியே பெரும் பரபரப்பிலிருந்தது.
"நாங்கள் மிகுந்த சோகத்தில் இருக்கிறோம். எனவே குறைந்தபட்சம் அவர் மருத்துவமனை அறையில் இருந்து வெளியே வந்து எங்களை நோக்கி கைகளை அசைத்தாலே போதும். அல்லது அவர் நன்றாக இருப்பது போன்ற விடியோ காட்சிகளையாவது வெளியிட வேண்டும்," என வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் கூறினார்.
பின்னர் ரசிகர்களிடம் பேசிய ரஜினி மருமகன் நடிகர் தனுஷ், ரஜினி நலமாக உள்ளார். கவலைப்படும்படியாக எதுவும் இல்லை என்பதால் மருத்துவமனையில் இருந்து கலைந்துபோகும்படி ரசிகர்களை கேட்டுக்கொண்டார்.
No comments:
Post a Comment