அமெரிக்க விமான நிலையத்தில் விடுதலைப் புலிகளைப் போலவே தானும் நடாத்தப்பட்டதாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் குற்றஞ் சாட்டியுள்ளார்.
நேற்று நள்ளிரவு 1 மணிக்கு சீமான் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவரை ஏராளமான நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் வரவேற்றனர்.
சீமானை வரவேற்க திரண்ட நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினார்கள்.
இச் சந்தர்ப்பத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
விசா உள்ளிட்ட உரிய பயண சீட்டுகளுடன் அமெரிக்காவுக்கு சென்ற என்னை அங்குள்ள விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என்பதாலேயே எனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறினர்.
இதற்கு மத்திய அரசின் தூண்டுதலே காரணம். அமெரிக்க விமான நிலையத்தில் அதிகாரிகள் கேட்ட கேள்விகள் என்னை அதிர்ச்சி அடையச் செய்தது.
உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் இம்மானுவேல் அடிகளார் சென்னை விமான நிலையத்தில் இறங்குவதற்கு இங்குள்ள அதிகாரிகள் அனுமதி மறுத்ததுபோல, அமெரிக்காவில் எனக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இது தமிழர் விரோத செயலாகும் என்று கூறினார்.
சீமான் அமெரிக்காவில் நடைபெற்ற உலகத்தமிழர் பேரமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றிருந்தார். நேற்று காலையில் நியூயார்க் விமான நிலையத்தில் அமெரிக்க அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தினர்.
நீங்கள் விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளர் எனவே உங்களை அமெரிக்காவுக்குள் செல்ல அனுமதிக்க முடியாது என்று விமான நிலைய அதிகாரிகள் கூறியதால் சீமான் அதிர்ச்சி அடைந்தார்.
அமெரிக்க பயணத்துக்காக இந்திய அரசாங்கத்திடம் இருந்து முறைப்படியான பயண அனுமதி சீட்டுக்கள் அனைத்தும் நான் வாங்கி உள்ளேன். பின்னர் ஏன் அனுமதி மறுக்கிறீர்கள் என்று சீமான் கேட்டுள்ளார்.
No comments:
Post a Comment