Thursday 13 January 2011

ரஜனிகாந்திற்கு ஒரு கடிதம் [TFC]

திரு ரஜனிகாந்த் அவர்களுக்கு வணக்கம்,
ஒரு ரசிகனாக இருந்தும் உங்களை “தலைவா” என்று அழைக்காததற்கு மன்னித்துக் கொள்ளுங்கள். ஈழத்தில் பிறந்ததால் “தலைவா” என்று ஒரு நடிகரை அழைப்பது எனக்கு அந்நியமாக இருக்கிறது. ஆயினும் நான் உங்கள் பரம ரசிகன்.
ஈழத்தை சேர்ந்த பெரும்பாலானவர்கள் உங்கள் ரசிகர்கள்தான். தமிழ்நாட்டில் இருப்பவர்களை விட நாங்கள் உங்களை அதிகமாக நேசிக்கின்றோம். இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் இதுதான் உண்மை.
தமிழ்நாட்டில் “குசேலன்” படத்தை மக்கள் தோற்கடித்த பொழுது, வெளிநாடுகளில் அதை நாங்கள் வெற்றி பெறச் செய்தோம். வெளிநாடுகளில் “தசாவதாரமா” அல்லது “குசேலனா” நன்றாக ஓடியது என்று விசாரித்துப் பாருங்கள். நான் சொல்வது உண்மை என்று புரியும். படத்தைப் பார்க்காது உங்களை மட்டுமே பார்ப்பதால், நீங்கள் எத்தனை குப்பைப் படங்களைக் கொடுத்தாலும், அதை நாங்கள் வெளிநாடுகளில் வெற்றிபெறச் செய்வோம். அவ்வளவு தூரம் உங்களை வெறித்தனமாக ரசிக்கிறோம்.
அத்துடன் “அரசியலுக்கு வாருங்கள்” என்று உங்களைத் தொல்லைப்படுத்தாத நல்ல ரசிகர்கள் நாங்கள். நீங்கள் அரசியலுக்கு வந்தால், அதன் மூலம் நாங்களும் பதவிகளைப் பெறலாம் என்கின்ற எதிர்பார்ப்புகள் இல்லாத தன்னலமற்ற ரசிகர்கள் நாங்கள்.
இடையிடையே உங்களின் படத்தை புறக்கணிக்கச் சொல்லி வெளிநாடுகளில் ஒரு சிலர் கிளம்பி வருவார்கள். ஆனால் நாம் அவர்களைப் புறக்கணிப்போமே அன்றி, உங்களை அன்று. உங்களைக் கன்னட வெறியர் என்று எல்லாம் எழுதுவார்கள். நாம் அனைத்துயுமே புறந்தள்ளி விடுவோம். உங்களைப் பற்றி யார் என்ன சொன்னாலும், நாம் அவற்றைக் கேட்பது இல்லை. நம்புவதும் இல்லை.
அண்மையில் நீங்கள் தமிழ்நாட்டு ரசிகர்களைச் சந்தித்த பொழுது, உங்களுடைய பெற்றோர்கள் தமிழ்நாட்டில் பிறந்தவர்கள் என்ற தகவல் வெளிவந்தது. உங்களை இனி யாரும் “கன்னடர்” என்று சொல்ல முடியாது என்பதால் எமக்கு அளவற்ற மகிழ்ச்சி. ஈழத் தமிழர்களுக்காக நீங்கள் குரல் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் நடிகர் சங்க உண்ணாவிரதத்தோடு அர்த்தமற்றுப் போய் விட்டது. அங்கே நீங்கள் சொன்ன கருத்து எத்தனை அரசியல் ஆழம் மிக்கது என்பது ஒரு சிலருக்குத்தான் புரிந்தது.
தமிழீழப் போராட்டம் இன்னும் வெற்றியடையவில்லை என்று சிலர் சலித்துக் கொள்வது உண்டு. ஆனால் உண்மையை நீங்கள் சரியாக உணர்ந்திருக்கின்றீர்கள். நாங்கள் போர் புரியவில்லை. எம்மீதுதான் போர் திணிக்கப்பட்டிருக்கிறது. தமிழினத்தை அழிக்கும் நோக்கோடு எதிரி பெரும் போரை எம்மீது திணித்திருக்கிறான். நாம் தற்காப்புப் போரை நடத்திக் கொண்டிருக்கிறோம். அழிந்து போய் விடக் கூடாது என்ற உறுதியோடு எதிரியின் போரை எதிர்கொள்கிறோம். எதிரி எங்களை வெல்ல முடியாத வரை, எம்மை அழிக்க முடியாத வரை, எமது போராட்டம் தொடர்ந்து நடக்கும் வரை நாம் வெற்றி பெறுகிறோம் என்பதுதான் உண்மை. இதை நீங்கள் மிக இலகுவான வார்த்தைகளில் சொல்லி விட்டீர்கள்.
“முப்படைகளை வைத்து முப்பது வருடங்களாக போராடியும் உங்களால் அவர்களை வெல்ல முடியவில்லையே” என்று நீங்கள் எங்கள் எதிரியைப் பார்த்து பரிகாசித்த பொழுது நாங்கள் மெய்சிலிர்த்துப் போனோம். எனக்கு இன்னும் ஒரு நிம்மதி ஏற்பட்டது. இனி யாரும் உங்களின் படத்தை புறக்கணியுங்கள் என்றபடி வரமாட்டார்கள். இதுவரை உங்களின் படத்தைப் புறக்கணித்த ஓரிருவரும் இனி எம்மோடு சேர்ந்து உங்களைத் திரையில் கண்டு விசிலடிப்பார்கள். இப்படித்தான் சில வாரங்களுக்கு முன்பு வரை நினைத்திருந்தேன். இப்பொழுது அந்த நினைப்பில் இடிவிழும் போல் இருக்கின்றது. நானே உங்கள் படத்தை புறக்கணிக்க வேண்டிய துர்ப்பாக்கி நிலை ஏற்படும் போல் இருக்கின்றது. இதைப் பற்றி உங்களோடு நான் சற்றுப் பேச வேண்டும்.
இயக்குனர் மணிரத்னம் வீட்டில் குண்டு வெடித்த பொழுது நீங்கள் கொடுத்த குரல் தமிழ்நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்திற்கு ஒரு காரணம் ஆகியது. அப்பொழுது தமிழ்நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருந்த பொழுது, நீங்கள் மணிரத்னம் வீட்டில் குண்டு வெடித்த பின்புதான் குரல் கொடுத்தீர்கள் என்று ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. ஆனால் நீங்கள் செய்ததில் தவறு ஒன்றும் இல்லை. திரையுலகம் என்பது உங்களின் தாய்வீடு. திரையுலகத்தை சேர்ந்த ஒருவரின் வீட்டில் குண்டு வெடித்த பொழுது நீங்கள் தட்டிக் கேட்டது நியாயமே. இந்தக் குணம் உங்களிடம் இப்பொழுதும் இருக்கும் என்ற நம்பிக்கையில் ஒரு பிரச்சனையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
திரையுலகத்தை சேர்ந்த இயக்குனர் சீமானை கருணாநிதியின் அரசு கொடிய சட்டம் ஒன்றில் சிறையில் அடைத்து விட்டது. சீமான் ஒரு இயக்குனர் மட்டும் அல்ல. அவர் ஒரு நடிகரும் கூட. உங்களின் இனம் அவர். சீமான் எந்தத் தவறும் செய்யவில்லை. ஒரு ஜனநாயக நாட்டில் தன்னுடைய மனதில் உள்ள கருத்தை சொன்னார். கேள்விகளைக் கேட்டார். அவருடைய கேள்விகளுக்கு பதில் சொல்ல வக்கற்றவர்கள் அவரை சிறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள். ஒரு ஆண்டுக்கு வெளியில் வர முடியாதபடி சிறையில் அடைத்து விட்டார்கள். “உத்தமர்” சோனியாவிற்கும், “தூயவர்” பிரணாப் முகர்யிக்கும் அஞ்சி சீமானை சிறையில் தள்ளியிருக்கிறார்கள்.
உங்களின் தாய்வீடான திரையுலத்தை சேர்ந்த ஒருவருக்கு நேர்ந்த அநீதி பற்றி நீங்கள் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை? தயவுசெய்து குரல் கொடுங்கள்! பேச்சுரிமையை நசிக்கின்ற கொடிய ஆட்சி இன்றைக்கு தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. இந்த ஆட்சி மாற்றத்திற்கு நீங்கள் கொடுக்கின்ற குரலும் காரணமாக இருக்கட்டும். ஆட்சி மாற்றம் ஏற்படாது விட்டாலும் பரவாயில்லை. உங்கள் குரல் ஆட்சியில் இருப்பவர்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்தினால் கூடப் போதும்.
ஆனால் இதற்காக உங்கள் படத்தை  நான் புறக்கணிக்கப் போவது இல்லை. இதை நீங்கள் செய்யாது விட்டாலும் நான் உங்கள் படத்தை திரையில் சென்று பார்ப்பேன். சீமானுக்காக குரல் கொடுங்கள் என்பதை ஒரு வேண்டுகோளாகவே வைக்கிறேன். ஆனால் ஒரு முக்கிய பிரச்சனை இருக்கிறது.
உங்களின் “எந்திரன்” படத்தை சன் தொலைக்காட்சி தயாரிக்கிறது. அங்கேதான் பிரச்சனை வருகிறது. “சன்” தொலைக்காட்சியையும், அது தயாரிக்கும் படங்களையும் புறக்கணிக்கின்ற முடிவை நான் எடுத்திருக்கின்றேன். நான் மட்டும் அல்ல. பலர் இந்த முடிவை எடுத்திருக்கின்றோம். “சன் தொலைக்காட்சியின்” படங்களை புறக்கணிக்கின்ற பொழுது, அங்கே உங்களின் “எந்திரன்” படமும் வந்து அகப்பட்டு விடுகிறது. “சன் தொலைக்காட்சி” எமது பிரச்சனைகளை இருட்டடிப்பதோடு, காங்கிரஸ் அரசை நியாயப்படுத்தியும் வருகிறது. இந்திய அரசு எம் மீது தொடுத்துள்ள போரை மறைத்து, அவர்கள் எமக்காக குரல் கொடுப்பது போன்று செய்திகளை பரப்பி வருகிறது. எம்மையும் தமிழ்நாட்டு மக்களையும் அது ஏமாற்றுகிறது. தமிழ்நாட்டு மக்கள் எமக்காக நடத்தும் போராட்டங்களை திட்டமிட்;டு இருட்டடிப்புச் செய்கிறது. தமிழின உணர்வாளர்கள் மீது இன்றைக்கு மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகளை நியாயப்படுத்துகிறது.
இப்படியான “சன் தொலைக்காட்சி” உங்களின் படத்தை தயாரித்தால், அதை புறக்கணிப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. மிகவும் வருத்தத்தோடு நான் இதைச் சொல்கிறேன். தயவுசெய்து என்னை அந்த நிலைக்கு ஆளாக்காதீர்கள். என்னை மட்டும் அல்ல. வெளிநாடுகளில் உள்ள இலட்சக்கணக்கான உங்கள் ரசிகர்கள் “எந்திரன்” படத்தை புறக்கணிக்கின்ற நிலையை உருவாக்கி விடாதீர்கள்.
உங்களிடம் அன்போடு வைக்கும் வேண்டுகோள் இதுதான். எமக்கு எதிரான “சன் தொலைக்காட்சியின்” நிலைப்பாட்டை மாற்றுங்கள். அல்லது உங்கள் தயாரிப்பாளரை மாற்றுங்கள்.
இப்படிக்கு
சுல்தான் படத்திற்காக காத்திருக்கும்
ஒரு ரசிகன்

only by ogtrichy.blogspot.com rajini

No comments:

Post a Comment